சென்னை
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஆளுநர் மாளிகையில் நேற்று சிறப்பு விழா நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள், அவர்களின் பெற்றோர், மாணவர்கள் மற்றும் சேவை அமைப்புகள் கலந்து கொண்டன.
நிகழ்ச்சியின் போது, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மாற்றுத் திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி ஆளுநர் கவுரவித்தார்.
பின்னர் பேசிய அவர், “மாற்றுத் திறனாளிகள் பரிதாபத்துக்குரியவர்கள் அல்ல; மிகுந்த திறமையும் வலிமையும் கொண்டவர்கள். அவர்களின் தனித்திறமைகளை நாம் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் நம்மைப் போலவே முழு உரிமைகள் கொண்ட சக மனிதர்கள்” என்றார்.
அவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட அனைத்து உரிமைகளும் நடைமுறையில் கிடைக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாக்க பெற்றோர் மிகுந்த சிரமம் எடுப்பதாகக் கூறிய அவர், அவர்களுக்கு உரிய மரியாதையும் ஆதரவும் வழங்கப்பட வேண்டும் என்றார்.
முன்னாள் காலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பல வசதிகள் கிடைக்காத நிலையில், தற்போது அரசு மற்றும் தனியார் துறையில் பல புதிய வாய்ப்புகளும் வசதிகளும் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
“மாரத்தான் போட்டியில் 85 கிலோ மீட்டர் ஓடிய மாற்றுத் திறனாளியின் திறமை என்னை ஆச்சரியப்படுத்தியது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
ராஜ்பவன் என்ற பெயர் லோக் பவன் என மாற்றப்பட்ட பின்பு நடைபெறும் முதல் பெரிய நிகழ்ச்சி இதுவென்றும் ஆளுநர் தெரிவித்தார்.
