மதுரை, டிசம்பர் 4
சொந்த பயன்பாட்டு வாகனங்களை பதிவு செய்வதில் புதிய நடைமுறை தமிழகத்தில் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இனி புதிய கார், இருசக்கரவாகனங்களை ஆர்டிஓ அலுவலகத்துக்கு கொண்டு செல்லத் தேவையில்லை.
தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதுவரை புதிய வாகனங்களை பதிவு செய்ய உரிமையாளரே நேரில் வாகனத்தை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.
ஆனால் மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் படி இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டியது. இதை செயல்படுத்தாததை தொடர்ந்து ஆட்டோமொபைல் டீலர் சங்கம் வழக்கு தொடர, உயர்நீதிமன்றம் அரசுக்கு தேவையான உத்தரவு வழங்கியது.
அதன்படி சொந்தமாக பயன்படுத்தும் புதிய வாகனங்களுக்கு இனி ஆர்டிஓ அலுவலகத்துக்குக் கொண்டு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
புதிய முறையில் டீலர்களே வாடிக்கையாளர்களின் தேவையான ஆவணங்களை ‘வாஹன்’ இணையதளத்தில் பதிவேற்றி, கட்டணங்களையும் சாலைவரியையும் ஆன்லைனில் செலுத்தி பதிவை முடித்துவிடலாம்.
இதனால் வாடிக்கையாளர்கள் வீணானஅலுவலகச் சுற்றும், நேரச் செலவும், யாருக்கும் பணம் கொடுக்க வேண்டிய அவஸ்தையும் இல்லாமல் போகும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
