ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு அவர்களின் வழிகாட்டுதலின்படி, தென்காசி மாவட்டத்தில் ‘உறவில் திருமணம் வேண்டாம்’ என்ற விழிப்புணர்வு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பிரசாரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் வீடு வீடாக சென்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண்கள் அடங்கிய குழுக்கள் பொதுமக்களை சந்தித்து ரத்த உறவுகளுக்குள் நடைபெறும் திருமணங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக, ரத்த உறவு திருமணங்களால் ஏற்படும் மரபணு குறைபாடுகள், உடல் மற்றும் மன வளர்ச்சி பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காலண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது சமூக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் முயற்சி என கூறப்படுகிறது.இதற்கிடையே, தனியார் அமைப்பு சார்பில் இத்தகைய பிரசாரம் நடத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக பழக்க வழக்கங்களில் தலையீடு என சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மற்றொரு தரப்பினர் இதை அறிவியல் அடிப்படையிலான நல்ல முயற்சி என ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்த பிரசாரம் குறித்து அரசு தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. இதனால் தென்காசி மாவட்டத்தில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
