நவம்பர் 28,
இலங்கை முழுவதும் கடந்த வாரம் உருவான டிட்வா புயல் கடும் மழையையும், வெள்ளத்தையும், மலைப்பகுதிகளில் நிலச்சரிவையும் ஏற்படுத்தி நாட்டை பெரும் அவலத்தில் ஆழ்த்தியுள்ளது. புயல் நவம்பர் 28 ஆம் தேதி கிழக்கு கடற்கரையைத் தாக்கியதும், பல மாவட்டங்கள் முழுவதும் திடீர் நீர்மூழ்கல் ஏற்பட்டதாக தகவல்.
அதிகாரப்பூர்வ தகவலின்படி இதுவரை 410 பேர் உயிரிழந்து, 336 பேர் காணாமல் போயிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 1.4 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி, பதுளை, நுவரெலியா போன்ற மலை மாவட்டங்களில் நிலச்சரிவால் வீடுகள், சாலைகள், தேயிலைத் தோட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
பல கிராமங்கள் மண்ணில் புதைந்த நிலையில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.மின் மற்றும் குடிநீர் வழங்கல் பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட சாலைகள் மற்றும் பல பாலங்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட நிலையில், இராணுவம், தேசிய மீட்பு படை மற்றும் சர்வதேச உதவி அமைப்புகள் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. பல பகுதிகள் இன்னும் பொதுமக்கள் அணுக முடியாத வகையில் மூடப்பட்டுள்ளன.தொடர்ந்து மழை வாய்ப்புகள் இருப்பதால், அரசு மலைப்பகுதிகளுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது
