ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தில் உள்ள கபேனா கிராமத்தில், கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் துன்புறுத்தப்பட்டதோடு, அவர்கள் பிரார்த்தனை செய்வதும் தடுக்கப்பட்டதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, ஜனவரி 25 அன்று ஒரு கும்பல் பிரார்த்தனைக் கூட்டத்தை சீர்குலைத்ததுடன், சுமார் 30 பழங்குடியின கிறிஸ்தவ குடும்பங்கள் தங்கள் மதத்தைக் கைவிடுமாறு எச்சரித்துள்ளனர். அங்கிருந்த ஆலயம் இடிக்கப்படும் என்றும், மத நடைமுறைகளைத் தொடர்ந்தால் குடும்பங்கள் கிராமத்தை விட்டு வெளியேற்றப்படும் என்றும் ஒலிபெருக்கிகள் மூலம் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
“நாங்கள் ஏன் பிரார்த்தனை செய்வதை நிறுத்த வேண்டும் என்று கேட்டபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆலயத்தை வெளியில் இருந்து பூட்டிவிட்டு, அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்,” என்று உள்ளூர்வாசி துனா சாந்தா குற்றம் சாட்டினார். திங்கள்கிழமை அன்று, அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஜலதர் சாந்தா (17) மற்றும் மோகன் சாந்தா (20) ஆகிய இரு இளைஞர்கள் கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது
இது தொடர்பாக உள்ளூர் உமர்கோட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக அச் சமூகத்தினர் தெரிவித்தனர். இருப்பினும், கிராமத்தில் இரு குழுக்களுக்கு இடையே பதற்றம் நிலவி வருவதாகவும், அமைதியைப் பராமரிக்க பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.”இதுவரை எங்களுக்கு எவ்வித புகாரும் வரவில்லை, ஆனால் இச்சம்பவம் பற்றி அறிந்தவுடன் நிலைமையைக் கட்டுப்படுத்த போதுமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்,” என்று உமர்கோட் காவல் நிலைய ஆய்வாளர் ரமாகாந்த சாய் கூறினார்
நபரங்பூர் ஆட்சியர் மகேஸ்வர் ஸ்வைன் கூறுகையில், இரு தரப்பு உறுப்பினர்களையும் கொண்ட அமைதிக் குழு உருவாக்கப்பட்டு, நிலைமையைச் சீர்செய்யும் வகையில் துணை ஆட்சியர் பிரகாஷ் குமார் மிஸ்ரா மேற்பார்வையில் கிராமத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது என்றார்.
மேலும், ஆக்கிரமிப்பு நிலத்தில் ஒரு வீடு கட்டப்பட்டுள்ளதாகவும், அதன் ஒரு பகுதியை பிரார்த்தனைக் கூடமாகப் பயன்படுத்துவதற்குச் சில கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஆட்சியர் குறிப்பிட்டார்.”அமைதிக் குழுவின் முடிவின்படி, பிரார்த்தனை கூடத்தை இடமாற்றம் செய்ய 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் பிரச்சனையைத் தீர்த்துக்கொண்டு, முன் போலவே ஒற்றுமையாக வாழ வேண்டும்,” என்று ஆட்சியர் TOI இதழிடம் தெரிவித்தார்.
தேங்கனல் மாவட்டத்தில் பிரார்த்தனை நடத்தியதற்காக போதகர் ஒருவர் பகிரங்கமாகத் தாக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து ராஷ்டிரிய கிறிஸ்தவ மோர்ச்சாவின் ஒடிசா பிரிவு பொதுச் செயலாளர் பல்லவ் லிமா கூறுகையில், இத்தகைய சம்பவங்கள் திட்டமிட்டு தூண்டப்படுவதாகவும், துருவமுனைப்பை ஏற்படுத்தும் முயற்சியாகவும் தெரிவதாகக் கூறினார். “நபரங்பூர் விவகாரத்தில், பழங்குடியினரே பழங்குடியினருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.
