October 30, 2025
அனைத்து வளமும், கல்வியும் பெருகி கிடக்கும் நம்முடைய நாட்டில் மூடநம்பிக்கைகளும் மலிந்து கிடப்பதை மறுக்க முடியாது. மூட நம்பிக்கைகள் உலகளவில் பரவி கிடந்தாலும், இதற்கு பலியாகுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலும் அதிகரித்து வருவது கவலையை தந்து வருகிறது. ஏற்கனவே நரபலி போன்ற பயங்கரங்களை தடுக்க முடியாமல் நாம் திணறி கொண்டிருக்கும்போது, இன்னமும் மூட நம்பிக்கைகளில் மூழ்கி, அப்பாவி உயிர்களை பலி தருவதை ஏற்க முடியாது.. இதோ கேரளாவில் நடந்துள்ள ஒரு கொடுமையை பாருங்கள்.
தென்மாநிலங்களைவிட, வட மாநிலங்களில் பெரும்பாலானோர் மூடநம்பிக்கைகளில் இன்னமும் மூழ்கி போயிருப்பதாக பரவலாக கருத்து இருந்த நிலையில், தென் மாநிலங்களிலும் இந்த மூட நம்பிக்கை இன்னல்கள் உயர்ந்துள்ளன.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது சதயமங்கலம் என்ற கிராமம்.. இங்கு சஜீர் என்பவர் வசித்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் ரெஜிலா.. இவருக்கு 36 வயதாகிறது.. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
மனைவிக்கு பிடித்த பேய் ஆனால், தம்பதி இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதால், அடிக்கடி தகராறு, சண்டைகள் நடப்பது வாடிக்கையாகும்.. இந்நிலையில், சஜீர் தன்னுடைய மனைவி ரெஜிலாவுக்கு பேய் பிடித்திருப்பதாக நம்பி வந்துள்ளார். மாந்திரீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவரான சஜீர், பேய் விரட்டுவதாக சொல்லி, எப்போது பார்த்தாலும் தன்னுடைய மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்… இதனால் வலி தாங்க முடியாமல் அழுதுகொண்டே ரெஜிலா, போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கணவர் மீது புகாரும் தந்திருக்கிறார்.
அப்போது போலீசார் சஜீரை அழைத்து வார்னிங் தந்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. ஆனாலும், மனைவிக்கு பேய் பிடித்திருப்பதாக சஜீர் முழுமையாக நம்பினார்.. இதனால் மனைவியை கடுமையாக அடிப்பதையும் நிறுத்தவில்லை
மாந்திரீகமும், மீன் குழம்பும் பிறகு, கிராமத்திலுள்ள மந்திரிவாதிகள் ஒவ்வொருவரையும் தேடிச்சென்ற சஜீர், “பேய் விரட்டுவது எப்படி?” என்பதற்காக ஸ்பெஷல் மாந்திரீக டிரெயினிங்கையும் கற்றுக்கொண்டு வந்தார். அப்படித்தான், ஆஞ்சல் பகுதியில் உள்ள உஸ்தாத் என்ற மந்திரவாதியை சஜீர் சமீபத்தில் சந்தித்துள்ளார்… அந்த மந்திரவாதி சொல்லி கொடுத்தபடி, சில சடங்குகளை ரெஜிலாவுக்கு செய்ய சஜீர் தயாரானார்.
சம்பவத்தன்று சடங்கு செய்வதற்காக மனைவியை அழைத்த சஜீர், ரெஜிலாவின் தலைமுடியை எல்லாம் கலைத்து விட்டார்.. மனைவியின் உடம்பெல்லாம் சாம்பலை பூசினார்.. பிறகு மாந்திரீக கயிற்றை கையில் கட்டிவிட்டு, பேய் ஓட்டுவதற்கான அடுத்த சடங்குகளை செய்ய தயாரானார்.
சடங்குக்கு மறுத்த ரெஜிலா
இதையெல்லாம் பார்த்து கோபப்பட்ட ரெஜிலா, அந்த சடங்குக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.. இது சஜீருக்கு ஆத்திரத்தை தந்துள்ளது.. இதனால் ரெஜிலாவை கடுமையாக தாக்கியிருக்கிறார்.. உடனே இதைப்பார்த்து பயந்து, அவர்களது மகன் தடுத்துள்ளார்.. ஆனால், அந்த சிறுவனையும் சஜீர் தாக்கியதாக கூறப்படுகிறது. மாந்திரீக பூஜைக்கு மனைவி மறுத்ததால், உச்சக்கட்ட ஆவேசம் அடைந்த சஜீர், கிச்சனுக்கு ஓடிச்சென்று, அடுப்பில் கொதித்து கொண்டிருந்த மீன் குழம்பை எடுத்து வந்து ரெஜிலாவின் முகத்தில் ஊற்றிவிட்டார்.
தலைமறைவு
கணவர் இதனால் வலியால் ரெஜிலா அலறி துடித்தார்.. அவரது சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதற்குள் சஜீர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.. பிறகு அங்கிருந்த அனைவரும் சேர்ந்து ரெஜிலா மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் சென்று, அவர்களும் விரைந்து வந்து விசாரணையை துவங்கியிருக்கிறார்கள். ஆனால், சஜீர் தற்போது தலைமறைவாகி உள்ளதால் அவரை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.. ரெஜிலாவுக்கு தீவிரமான சிகிச்சையும் நடந்து கொண்டிருக்கிறது,.
இந்தியாவிலேயே கல்வியறிவு அதிகம் மிக்க மாநிலமாக திகழும் கேரளாவில் இப்படியொரு கொடுமையா? என்று பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்
